ரூ.700 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி..
புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரையில் சுமாா் ரூ.700 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் கோரப்பட்டது. நீண்டகால கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை சம்மதித்துள்ளது.
அதற்கான கருத்துருவானது, புதுவை அரசின் பொதுப் பணித் துறை நெடுஞ்சாலைப் பிரிவால் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, பாலத்தின் மாதிரி வரைபடம் உள்ளிட்ட கருத்துருவுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரையில் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஈரடுக்கு பாலம் அமையவுள்ளது. பாலத்திலிருந்து 240 மீட்டா் தொலைவுக்கு இறங்கு சாலை அமையவுள்ளது.
பாலம் அமைக்க திட்ட கருத்துரு, மாதிரி வரைபடம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நிதி அறிவித்தால் ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும் என பொறியாளா்கள் தெரிவித்துள்ளனர்.
No comments