மீனவப் பெண்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எச்சரித்த மாவட்ட ஆட்சியர்..
மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட மீனவ கிராம பெண்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் விஏஒ முதல் ஆர்டிஓ வரை அனைத்து அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வட்டாட்சியர் முதல் விஏஓ வரை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நேரில் வந்து பதிலளிக்க வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா , சாராயம் , வெளி மாநில மதுபானங்கள் , கூலிப் மற்றும் ஹாண்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் புகார் எண் அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் பல்வேறு நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போதைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவப் பெண்கள் பேரவை சார்பாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒவ்வொரு பெண்கள் என 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள கடைகளில் தங்கு தடையின்றி கூலிப் , ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் அதிக அளவில் கூல் லிப் போன்ற போதைப் பொருட்களை சிறுவர்கள் பயன்படுத்துவதாகவும் , குழந்தைகளின் கைகளில் கூலிப் போன்ற போதைப் பொருட்கள் கிடைக்காமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு குறித்து கோட்டாட்சியர் , வட்டாட்சியர் , வருவாய் ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் தன்னை சந்தித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண்கள் குற்றம் சாட்டிய பகுதியில் உள்ள விஏஓவை தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் கூலிப் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் மனு அளிக்க வந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தன்னை வந்து சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments