காட்டாற்று வெள்ளத்தினால் செக்காரக்குடியில் சாலை துண்டிப்பு வீடு திரும்ப முடியாமல் தவித்த அரசு பள்ளி மாணவர்களை மீட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடியை அடுத்த செக்காரக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொட்டிய கனமழையினால் அப்பகுதியில் உள்ள சிறிய தாம்போதி பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் செக்காரக்குடியில் உள்ள முக்கிய சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
காட்டாற்று வெள்ளத்தால் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் தளவாய்புரம், கல்லம்பரும்பு, மகிழம்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 64 மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் செக்காரக்குடியில் தவித்து வந்தனர். இதனையடுத்து செக்காரக்குடி ஊராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவுக்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் தகவலை தெரிவித்தார்.
உடனடியாக, மாற்றுப்பாதையில் பல கி.மீ சுற்றி செக்காரக்குடி வந்த எம்.சி.சண்முகையா எல்எல்ஏ மாணவர்களுக்கு தைரியம் அளித்தார். மேலும், மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அவர்களை சாப்பிட வைத்தார். பின்னர், இரண்டு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தளவாய்புரம், கல்லம்பரும்பு, மகிழம்புரம் ஊர்களை சேர்ந்த 64 மாணவர்கள் மாற்றுப்பாதையில் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் வீட்டில் பத்திரமாகவிடப்பட்டனர். இதனால், மழைவெள்ளத்தினால் வீடுதிரும்ப முடியாமல் பள்ளியில் முடங்கியிருந்த தங்கள் குழந்தைகள் வீடு திரும்பியதால், மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். கனமழையினால் பள்ளியில் சிக்கித் தவித்த மாணவர்களுக்கு உதவிய எம்.சி. சண்முகையா எம்எல்ஏவுக்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரமேஷ், செக்காரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராமலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments