கூட்டணி கட்சியினரை வைத்து விமர்சனம் செய்யும் ஸ்டாலினுக்கு திராவிடம் பற்றி பேச தகுதி இல்லை..
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
விஜய் மாநாட்டில் பேசும் போது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தின் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என அதிமுகவின் கருத்தை பின்பற்றி காட்டமாக பேசினார். அதற்கு நேரிடையாக பதிலளிக்க வேண்டிய ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வர் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகிய இருவரும் நடிகர் விஜய்யின் பகீரங்க குற்றச்சாட்டுக்கு பதில் கூற கூட திராணி இல்லாமல் உள்ளனர். இது சம்பந்தமாக நேரிடையாக பதிலளிக்க வேண்டிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களின் முதுகுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அவர்களை விட்டு ஏதேதோ பதில் கூறிக்கொண்டு இருக்கிறார்.
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் என அறிவித்த இலவச 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று வரை 75 சதவீதமான மக்களுக்கு சென்றடையவில்லை. அதே போன்று தற்போது ரூ.500 மானியத்துடன் 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இவ்விரண்டையும் தேடி மக்கள் ஆங்காங்கே அலையாய் அலைந்து கொண்டு இருக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசால் அறிவிக்கப்பட்ட உணவு பொருட்கள் முதன் முதலாக வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு போலி கவுரவம் பார்க்காமல் 10 கிலோ இலவச அரிசிக்கு ரூ.500-ம், 2 கிலோ சர்க்கரைக்கு ரூ.100-ம், 10 உணவு பொருட்களுக்கு மானியம் ரூ.500 என மொத்தம் ரூ.1,100-ஐ அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றார்.
No comments