குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: 4 ஆயிரம் போலீசார், 250 சிசிடிவி கேமராக்களுடன் பாதுகாப்பு ஏற்பாடு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான்.
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் 4 ஆயிரம் போலீசார், 250 சிசிடிவி கேமராக்களுடன் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்ச்சி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 3ஆம் தேதி முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 3 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், சுமார் 850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் கொடியேற்ற நிகழ்வின்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போதும் தசரா திருவிழாவிற்கு தினசரி பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வருவது போல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 12ஆம் தேதி நடைபெறும் சூரசம்காரம் நிகழ்விற்கு சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 10 காவல் உதவி மையங்கள் அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, அவசர மருத்துவ உதவி மையம், கழிப்பிட வசதிக்காக ஆங்காங்கே நடமாடும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டும், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள், தசரா குழுக்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்யவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments