சிவகங்கை மாவட்டம் மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தி, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார்.
கதர் ஒரு வாழ்க்கைத் தத்துவம். கதர் என்பது வெறும் நூல் இலைகளால் ஆன துணி மட்டுமல்ல, அது சுதந்திர போராட்ட காலத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு பேராயுதம். காந்தியடிகள் சுதேசிப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சுதந்திர போராட்ட ஆயுதமாக கையால் நூற்கும்இராட்டையை பயன்படுத்தி, கதர் நெசவில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்தி, அன்னிய துணிகளை தீயிட்டு கொளுத்தினார்.
கதர் இன்றைய கணினியுகத்தில் கோடான கோடி அடிதட்டு மக்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம். கதர் தொழிலால் வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டியடிக்க முடியும் என்பதை செயல் வடிவில் நிரூபித்து காட்டியவர் காந்தியடிகள் ஆவார். நீங்கள் அணியும் கதராடைகளால் பல அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடக்கிறது என்பதை உணருங்கள். இன்று நீங்கள் வாங்கும் கதராடைகளால் ஏழை மக்களின் எதிர்காலம் சிறப்பாகிறது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தமிழ்நாட்டில் பல இலட்சக்கணக்கான ஏழை எளிய நூற்போர், நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின், பொருளாதார வளர்ச்சிக்கும் பேருதவி செய்து வருகிறது.
மேலும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர் இரகங்கள், பாலியஸ்டர் மற்றும் பட்டு இரகங்கள் ஆகியவைகளுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. கதர் விற்பனை நிலையங்களில் கதர் இரகங்கள், பாலிஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு ஆகியவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாகத் திகழும் இக்கதர் ஆடையினை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் தலையாய கடமையாகும். தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் தேசியத் தலைவர்களின் நினைவு தினம் ஆகிய தினங்களில் கதராடை அணிந்து நெசவாளரின் குடும்ப முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நீங்கள் ஆடைகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் கதராடைகளுக்கு செலவு செய்தாலே பல ஏழை எளிய நூற்போர், நெய்வோர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்க இயலும்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சுமார் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டிலான கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 நடப்பாண்டிற்கு விற்பனை குறியீடாக ரூ.01.80 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விற்பனையும் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கீடை விட அதிக அளவில் விற்பனை மேற்கொள்வதற்கும், கதர் பொருட்களை வாங்குவதன் மூலம் கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கிடுவதற்கு மட்டுமன்றி, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடவும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய கதராடையினை அணிந்து மகிழ்வுடன் கொண்டாடுங்கள். இதுவே நம் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றி கடனாகும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், உதவி இயக்குநர் (கதர் கிராம தொழில்கள்) .ஒய்.நல்லதம்பி, கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments