புதுச்சேரியில் பணிநிரந்தரம், முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 14 ஆண்டுகளாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் 1321 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வவுச்சர் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.18,000 ஆக ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனால் வரை அந்த ரூ.18,000 ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்த ரூ.18,000 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். விடுபட்ட 119 வவுச்சர் ஊழியர்களையும் இணைத்து இந்த ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் அனைத்து வவுச்சர் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டகூலி 852 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வயது அடிப்படையில் சீனியாரிட்டி வகுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வவுச்சர் ஊழியர்கள் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், புதுச்சேரி மாநில முழுவதும், குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்பு, வாய்க்கால்கள் துார்வாரும் பணி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.
No comments