புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு அரசின் இலவச அரிசி உள்ளிட்ட பண்டிகை கால பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணத்திற்கு பதிலாக பொருளாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதலமைச்சர் அறிவித்தது போன்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ இலவச அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெக்ட் மூலம் வழங்கப்படும் என ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை என்பது இந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வழங்கப்படும் என கூறியுள்ளது.
புதுச்சேரி மக்களின் நீண்ட நெடு நாள் கோரிக்கைகளான இலவச அரிசிக்கான பணம் போதுமானதாக இல்லை என்றும், பணத்திற்கு பதில் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர் பெருமக்கள் சட்டபேரவை தலைவர்கள் அனைவரும் கடந்த 36 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படும் பிரதமரை சந்தித்து விட்டோம் உடனடியாக வழங்கப்படும் என கூறி வருகின்றார். ஆனால் இதுவரை இலவச அரிசி வழங்கப்படவில்லை. இலவச அரிசி வழங்கும் இத்திட்டத்தில் வாக்களித்த மக்களை வஞ்சித்து ஏமாற்றும் விதத்தில் அரசின் செயல்பாடு உள்ளது. இதற்கு மேலும் ஆட்சியில் உள்ளவர்கள் இலவச அரிசி வழங்கும் திட்டம் சம்பந்தமாக அறிக்கை வெளியிடுவதை நிறுத்துக்கொள்ள வேண்டும்.
இலவச அரிசி வழங்குவது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி அரசின் கொள்கை முடிவு என்ன? பணத்திற்கு பதிலாக இலவச அரிசி மாதந்தோறும் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா. அப்படி அனுமதி அளித்திருந்தால் எந்த மாதத்தில் இருந்து இலவச அரிசி வழங்கப்படும் என ஒரு தெளிவான விளக்கத்தை துணை ஆளுநராக வெளியிட வேண்டும்.
கடந்த வாரம் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் சாலைகள் நீரில் மூழ்கின. நகரப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் மழை நீர் உட்புகுந்தது. இதையே அரசு ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நகரின் மழைக்கால வடிகால்களை அரசு மேம்படுத்தி இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளதால் தண்ணீர் எப்படி வெளியேறும். மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் என்ன செய்துள்ளீர்கள். ஆனால் முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டமும், மாவட்ட ஆட்சியர் தலைமைநில் ஒரு கூட்டம் என ஒரு போட்டோ சூட் வேலையை தான் செய்து வருகிறது.
கடந்த 2 மாத காலமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொசு உற்பத்தி மற்றும் சுகாதார சீர்கேட்டினால் டெங்கு, மலேரியா, விஷ காய்ச்சல் உள்ளிட்ட பருவகால தொற்று நோய்கள் பரவி வருகிறது. எங்கு எல்லாம் சுற்றுப்புற சூழல் சரியில்லையோ அங்கு எல்லாம் டெங்கு நோய் அதிகமாக பரவி வருகிறது. வம்பாகீரபாளையம் மீனவர் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருவமழை துவங்கியுள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் கொசு உற்பத்தி அதிகமாகிறது. கொசு உற்பத்தியை தடுக்க எந்த மருந்தும் அரசு தெளிப்பதில்லை. மாலை நேரத்தில் கொசு ஒழிப்பு புகை அடிப்படை கூட நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. இது சம்பந்தமாக பலமுறை எடுத்து கூறியும், ஆளும் அரசு கண்டுகொள்வதே இல்லை. ஒரே ஒரு நாள் துணைநிலை ஆளுநர் அவர்கள் எந்தவிதமான முன்னரிவிப்பும் இல்லாமல் அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று அவசர படுக்கை பிரிவு வார்டை பார்வையிட வேண்டும். அப்போது தான் மக்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும் துணைநிலை ஆளுநருக்கு புரியும்.
புதுச்சேரி நகராட்சியால் தற்காலிக பேருந்து நிலையம் மாற்று இடத்தில் அமைந்துள்ளது. புதுச்சேரி நகராட்சியும் பொறுப்பற்ற செயலுக்கு இந்த மாற்று பஸ் நிலையமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பஸ் நிலையத்திற்குள் செல்லும் எந்த பயணியும் பேண்ட், வேட்டி சட்டையில் சற்று பூசிக்கொள்ளாமல் வர முடியாது. அந்த அளவிற்கு சேறும் சகதியுமாக பஸ் நிலையம் காட்சி அளிக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் சுமார் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைத்திருக்கலாம். அதையும் நகராட்சி ஆணையர் செய்யவில்லை. ஆனால் அவருக்கு சம்பந்தமில்லாத பொதுப்பணித்துறைக்கு சம்பந்தமான மாலில் இருந்து ரயில்வே கேட் வரை விடப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு இவர் அனுமதி அளித்துள்ளார். இது சம்பந்தமாக எந்தவிதமான டெண்டரும் விடப்படாமல் தனக்கு வேண்டியவருக்கு வசூல் செய்ய இவர் எப்படி அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. தற்காலிக பேருந்து நிலையம் ஏ.எப்.டி மைதானத்திற்கு வருவதற்கு முன்னால் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து நீதிமன்றம் வரை விடப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. பொதுப்பணித்துறைக்கும் இவரே முதன்மை பொறியாளரா என்று தெரியவில்லை என கூறினார்.
No comments