புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் கழிப்பறை மேற்கூரை உடைந்து மாணவி படுகாயம்..
புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் கழிப்பறை மேற்கூரை உடைந்து மாணவி படுகாயமடைந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி- வழுதாவூர் சாலையில் 300கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று கல்லூரியின் கழிப்பறை கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மைக்ரோ பயாலஜி இரண்டாம் ஆண்டு மாணவி ஹேமலதா படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொதிப்படைந்த சக மாணவ- மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக சென்று புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகளையும் புதுவை அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments