Breaking News

ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து கோரிக்கை மனு.


அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (GEMCH)- பெருந்துறை முதல்வர் (DEAN) T.ரவிக்குமார் MD அவர்களை‌ இன்று (25-10-2024) ஏஐடியுசி - ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு போனஸ், குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம், சட்ட பூர்வமான விடுமுறைகள் வழங்குதல், PF & ESI சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் அனைத்து பணியாளர்களையும்‌ இணைத்தல், ஒப்பந்தப்படி 100% பணியாளர்களை பணியமர்த்துதல், அதிகரிக்கப்பட்டுள்ள‌ படுக்கைக்களுக்கு‌ ஏற்ப‌ கூடுதல் பணியாளர்களை‌ நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.‌

அதில், தீபாவளி பண்டிகை வரும் 31-10-2024 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கிரிஸ்டல் இண்டகரேட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் கீழ், GEMCH - அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரோடு தீபாவளி பண்டிகையை கொண்டாட தாங்கள் உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 

எமது ஏஐடியுசி  சங்கத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகளை கீழே கொடுத்துள்ளோம். 

கோரிக்கைகள்:

போனஸ்:

அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களுக்கும், 2023-2024 ஆம் ஆண்டுக்கான போனஸாக அவர்கள் ஈட்டிய சம்பளத்தில் பத்து சதவீதத்தை (10%) வழங்க வேண்டும். மேற்கண்ட போனஸை தீவாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வழங்கிட வேண்டும் 

தேசிய, பண்டிகை விடுமுறை: 

தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் அல்லது விடுமுறை நாட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மற்றொரு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். 

குறைந்த பட்ச ஊதியம்: 

ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் கடந்த இரண்டாண்டுகளாக (2023-2024 மற்றும் 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கு முறையே நாளொன்றுக்கு ரூ.532/- மற்றும் ரூ.562/-) நாளதுவரை அமலாக்கப்படாமல் உள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில் (நாளொன்றுக்கு ரூ.532/-) ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 2023 நவம்பர் முதல் 2024 மார்ச் வரையிலான ஊதிய உயர்வு  தொகை வழங்கப்படாமல் பாக்கி உள்ளது.

மேலும், 2024 ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.562/- நாளதுவரை வழங்கப்படவில்லை. 

ஆகவே, மேற்கண்ட இரண்டாண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகை முழுவதையும் அரியர்ஸாக‌ தீபாவளி பண்டிகைக்கு முன்பு  வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 

அதன் பின்னர் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.‌‌ முதல்வர் (DEAN) அவர்கள் மருத்துவ‌‌ கல்வி‌ இயக்கக அதிகாரிகள் மற்றும் கிரிஸ்டல் இண்டகரேட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரினார்.

இந்நிகழ்வில் சங்கத் தலைவரும், ஏஐடியுசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி, சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.எம்.ஜெயபாரதி, பி.எஸ்.சண்முகம், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

No comments

Copying is disabled on this page!