மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும் செம்பனார்கோயில் ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது:
சுப்பிரமணியன்:- கஞ்சாநகரம் ஊராட்சி பொன்னுக்குடி கிராமம் மாதா கோயில் எதிரே வடிகால் வாய்க்காலில் மதகு கட்ட வேண்டும். மேலும் மயான சாலை அமைத்து தர வேண்டும்.
ராஜ்கண்ணன்:- எனது கோரிக்கையை ஏற்று பெரிய மடப்புரம் முதல் மண்மலை வரை இரண்டடுக்கு தார்சாலை அமைத்துக் கொடுத்த பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜின்னா தெரு முதல் புதுமனை தெரு வரை விரைந்து சாலை அமைத்து தர வேண்டும்.
தேவிகா:- எரவாஞ்சேரி பாலத்தில் இருந்து இலுப்பூர் மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் உள்ள கைலாசநாதர் கோயில் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். இலுப்பூர் சிவன்கோவில் தெருவில் தார்சாலை அமைத்து தர வேண்டும். எரவாஞ்சேரியில் சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும்
ஷகிலா:- உத்தரங்குடி ஊராட்சி ஓலக்குடியில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். சங்கரன்பந்தல் பாலம் அருகே மீன் விற்பனை செய்யப்படுவதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே மீன் விற்பதற்கு என்று தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும். மேலும் சேதமடைந்த தெரு மின்விளக்குகளை சீரமைத்து தர வேண்டும்.
சாந்தி:- மழைக்காலங்களில் ஆக்கூர் முக்கூட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள எம்ஜிஆர் நகர், தமிழ் நகர் ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அங்கு மழைநீர் தேங்காத வகையில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
சக்கரபாணி:- கருவாழக்கரை ஊராட்சியில் மருதூர்- சர்வமானியம் பகுதி, மேற்கு வெள்ளாளத்தெரு சிமெண்ட் சாலை, மேலையூர்- ஆறுபாதி செல்லும் சாலை, இந்திரா காலனி சாலை ஆகிய சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
ரஜினி:- சேமங்கலம்-கூனந்தெருவில் தார்சாலை மற்றும் தென்பாதி- தொக்கலாகுடியில் உள்ள ஆதிதிராவிடர் மயான சுடுகாடு சாலை அமைத்து தர வேண்டும்.
செல்வம்:- சந்திரபாடியில் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன . இதற்காக முதலமைச்சருக்கும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விடுபட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைத்து தரப்படும். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா? என்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தினமும் நீரேற்றும்போது குளோரினேஷன் செய்யப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். இதற்கு சுகாதாரத் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படாத வகையில் அந்தந்த பகுதிகளில் தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அதனை அகற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments