மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து மயிலாடுதுறையை ஒட்டியுள்ள மன்னம்பந்தல் மற்றும் ரூரல் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூரல் மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மயிலாடுதுறை நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தலை இணைக்க கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிராமமக்கள் முன்மொழிந்து கையொப்பமிட்ட தீர்மானத்தின் நகல்களை இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் ஒப்படைப்பதற்காக மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கிராம மக்கள் 500 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் கிராம மக்கள் அலுவலக வாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் முத்துவேல் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக் கொண்டார். அலுவல் நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் வெளியே சென்று இருப்பதாகவும் தகவலை சொல்லி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
No comments