காந்தி ஜெயந்தியையொட்டி 1ரூபாய்க்கு வேட்டி வழங்கியதால் அலைமோதிய கூட்டம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் தனியார் காதி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி 1ரூபாய்க்கு வேட்டி வழங்கியதால் அலைமோதிய கூட்டம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் காவல் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு ரூபாய்க்கு வேட்டி விற்பனை எனவும், முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. விற்பனை துவங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளி மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க அங்கு குவிந்தனர். இதனால் அக்கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது. முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இக்கடையில் கடந்த ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று இதுபோன்று ஒரு ரூபாய்க்கு வேட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு ரூபாய்க்கு வேட்டி வழங்குவது விளம்பரத்திற்காக இல்லை எனவும் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் கதர் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் இதை செய்து வருவதாக கடையின் உரிமையாளர் லோகநாதன் தெரிவித்தார்.
No comments