தூத்துக்குடியில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கிவைத்தனர்.
இந்திய கயாக்- கேனாயிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு கயாக்- கேனாயிங் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் 2வது தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி துவக்கவிழா முத்துநகர் கடற்கரையில் நடைபெற்றது. விழாவில் சங்க செயலாளர் மெய்யப்பன் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்று தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அப்போது, அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: தூத்துக்குடி கடல் பகுதி துடுப்பு படகு போட்டிக்கான சிறந்த இடமாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடல்சார் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 2வது ஆண்டாக தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி நடைபெறுகிறது. வரும் காலங்களில் இப்போட்டிகளை இன்னும் சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுக்சேரி, கோவா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 175க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகள், கயாக் (துடுப்பு மூலம் கடலில் செல்வது) போட்டியில் 200மீ, 400 மீ, 500 மீ, 1000 மீ தூரமும், ஸ்டாண்டிங் பெடலிங் (நின்றபடி துடுப்பைக் கொண்டு கடலில் செல்வது) போட்டியில் 200மீ, 1000மீ, 5000மீ தூரமும் என 18 வகையான போட்டிகள் சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் என 3 பிரிவுகளாக நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேலும் இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், சங்கப் பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் அர்ஜூன், ரோஷன், மிதுன், ஜெயபாலன், திமுக மாநகரச்செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments