Breaking News

பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு தகவல்.

 


பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு பதிவு சட்டம் வழிவகை செய்துள்ளது. குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழாகும்.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்த நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியினை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்கு பின் 15 வருடங்கள் வரை ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.

கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்கள் மற்றும் அதற்கு பிறகு பிறந்த அனைவருக்கும் சிறப்பு வாய்ப்பாக பிறப்பு சான்றிதழில் பெயர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இறுதி வாய்ப்பாக டிசம்பர் 31,2024-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. இதுவே இறுதி வாய்ப்பாகும். அதற்குள் அனைவரும் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பதை கண்டறிந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தையின் பெயரை பதிவு செய்திடுமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தையின் பெயரின்றி பதிவு செய்யப்பட்டுள்ள நேர்வுகளில் தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்து பிறப்பு சான்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு டிசம்பர் 31, 2024-ம் என்பதால் பொதுமக்கள் இந்த இறுதி வாய்பை பயன்படுத்தி கொண்டு குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற்று கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!