Breaking News

புதுச்சேரியில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா குற்றச்சாட்டு !

 



புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா  செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது.


கல்வி, சுற்றுலா, ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற புதுச்சேரி மாநிலம் இன்று போதை கலாச்சார நகரமாக உருவெடுத்துள்ளது கண்டு புதுச்சேரி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த போதை வஸ்த்துக்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் இளம் சீரார்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதும், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அப்பாவிகளை கொடூரமாக தாக்கும் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருட்கள் தடுப்பு விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதால் பல ஆயிரம் இளைஞர்கள் தங்கள் வாழ்வை சீரழித்து வருவதை கண்டு பெற்றோர்களும், பொதுமக்களும் அச்சப்படுகிறார்கள். போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைப்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பல்வேறு சமூக விரோதிகள் புதுச்சேரியில் தஞ்சமடைந்து வருகின்றனர். 

கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்கள் இன்று ரவுடிகளாக உருவெடுத்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு இந்திராகாந்தி சதுக்கம் அருகே அமைதியாக உட்கார்ந்து வியாபாரம் பார்க்கும் பெட்டிக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு சோடா பாட்டில்களால் கொடூரமாக இரண்டு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் சமூக வளைதலங்களில் பரவியது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். படுகாயமடைந்த பெட்டிக்கடை உரிமையாளர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதேபோல், புஸ்சி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் பட்டப்பகலில் கையிள் இருந்த செல்போனை பறிந்துச் சென்றுள்ளனர். புதுச்சேரி மக்களை பதற வைக்கின்ற இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மாநிலத்தை மோசமான சூழநிலைக்கு கொண்டு செல்கிறது. சிசிடிவி கேமரா இருந்ததால் இந்த சம்பவங்கள் வெளியே தெரிகிறது. அது இல்லாமல் எவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கும் என்று என்னும்போது நெஞ்சம் பதறுகிறது. 

அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்கள். 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்திற்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி கட்டுப்பாட்டில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிகளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்தும் கொலை சம்பவங்கள் தொடங்கி, திருட்டு, போதைப் பொருள் விற்பனை என பல சம்பவங்களும் அதிகளவில் நடந்தேறி வருவது கண்டு புதுச்சேரி அரசு வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு நடவடிக்கையில் அரசு எந்த சமரசத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. ஒவ்வொரு காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தவறு செய்வதற்கு ரவுடிகள் அஞ்சும் அளவிற்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். அப்போது தான் மாநில மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு போதைப் பொருட்கள் மாநிலத்திற்குள் வருவதை முழுமையாக தடை செய்ய வேண்டும். எந்த காவல் எல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதோ அந்த காவல் நிலையத்தின் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை பணியிடை நீக்கம் செய்யும் அளவிற்கு கடுமையான உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வியாபாரிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


No comments

Copying is disabled on this page!