பொது இடம் ஆக்கிரமிப்பு; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நம்பி குளம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை போலீசார் திடீரென கைப்பற்றியதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுந்து காவல் நிலையத்தில் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் சுமார் 5000 திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இதற்கு இடையே இந்த ஊரில் உள்ள நம்பி குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய இளைஞர்கள் அதே பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் சிறிதாக விளையாட்டு மைதானம் அமைத்து கைப்பந்து கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர்.
இதற்கிடையே அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை வெளியேற்றிவிட்டு விளையாட்டிற்காக பயன்படுத்தப்பட்டிருந்த வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும் சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு இடம் மட்டுமல்லாமல் அந்த இடத்தை சுற்றி கோவிலிடம் உள்ளதாகவும் கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மற்றொரு பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரியும் காவல் நிலையத்தில் பதில் புகார் மனு அளித்தனர். அந்தப் புகாரை பெற்ற போலீசார் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்துவிட்டு நாளை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் இதனை ஏற்று அந்த பகுதி இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments