தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் போட்டி வெளிநாடுகளுடன் தான் பிற மாநிலங்களுடன் அல்ல அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி.
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்: தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் தொழில்நுட்பப் பிரிவு பணிகள் வீட்டிலிருந்தே வேலை என்ற நிலைக்கு வந்துள்ளது.
மேலும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக, டைடல் நியோ பார்க் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த பணி நிறைவடைந்துள்ளது. இதில், 11 நிறுவனங்கள் வரவுள்ளன. அதற்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க கையெழுத்திட்டுள்ளன. தூத்துக்குடிக்கு வின்பாஸ்ட் போன்று, பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் வரவுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடிக்கு பெரிய திட்டம் ஒன்று வரவுள்ளது. இதற்காக இரு நாடுகளிடம் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனை விரைவில் முதல்வர் அறிவிப்பார். எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களைத் தாண்டி, வெளி நாடுகளுடன்தான் போட்டியிடுகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவார்களா என்று ஆராய்ந்து அதன் பின்னரே தொழில் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. எனவே, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் தொழில் தொடங்குவதற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments