வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதாராமு, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரவாரியம், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய இடங்களாக 201 இடங்கள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து, ஆக.24-ஆம் தேதி திருவாலங்காடு வெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த குமார் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், படுகாயமடைந்த கலியபெருமாள் என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.
No comments