புதுச்சேரியில் ‘குரூப் பி’ பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க வலியுறுத்தி துணைநிலை ஆளுநரிடம் திமுக மனு அளித்துள்ளது
புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் எம்எல்ஏ-க்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத், திமுக அவைத் தலைவர் எஸ்பி.சிவகுமார்,ஆகியோர் ராஜ்நிவாஸில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில்,
அரசுத் துறைகளில் குரூப் பி பணியிடங்களான பொதுப்பணித் துறையின் இளநிலைப் பொறியாளர் மற்றும் ஓவர்சியர், கல்வித் துறையின் பட்டதாரி ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர், நிர்வாகத் துறையில் உதவியாளர் பதவிகளுக்கு தற்போது தேர்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் தாமதமாக வந்துள்ளது. காலத்தோடு அறிவிப்பு செய்திருந்தால் பல பட்டதாரிகள் தங்கள் வயது வரம்பை எட்டும் முன்பாக தேர்வுகளில் பங்கேற்றிருக்க முடியும். குறிப்பாக, உதவியாளர் பதவி இவ்வாண்டு தான் முதல் முதலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஓரிரு வயது அதிகமான காரணத்தால் இந்தத் தேர்வில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது வருந்தத்தக்கது.எனவே, புதுவை ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் வயது தளர்வு அளித்து, தேர்வுகளில் வயது வரம்பின் விளிம்பில் உள்ள பட்டதாரிகளும் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments