ரேஷன் கடையை திறக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் !
புதுச்சேரி மாநில திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
இதில், மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்து கொண்டு, மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவம் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொருட்கள் வழங்காவிட்டால் பொதுமக்களை திரட்டி கண்டனப் போராட்டம் நடத்துவது, புதுச்சேரியில் செயல்படாமல் முடங்கியுள்ள மகளிர் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், உள்ளூர் புகார் குழுவினை முறையாக செயல்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உரிய நீதியை வழங்க வேண்டும், காவல் நிலையங்களில் புகார் அளிக்கவரும் பெண்கள் மீதான புகார்களை மகிளா டெஸ்க் மூலம் விசாரணை செய்து உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க பாலின சமத்துவத்தை முன்னிறுத்தி சமூக பாலின வேறுபாடுகள் இன்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களை புதுச்சேரி அரசு முன்னெடுக்க வேண்டும், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்காமலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கும் புதுச்சேரி அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அரசை இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்துவது, வீட்டு வேலை, தொழிற்சாலை, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை வழங்கவும், பெண் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்யவும் அரசை வலியுறுத்துவது, சமூக பாலின சமூக பாலின வேறுபாடுகளை களைந்து சமூகத்தில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் ஆற்றுப்படுத்தும் மையத்தை புதுச்சேரி சுகாதாரத் துறை செயல்படுத்த வேண்டும், பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களை மூட வேண்டும், புதுச்சேரியில் அதிகபடியான மகளிர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியை புதுச்சேரியில் அமைக்க மாநில கழகத்தோடு இணைந்து மகளிர் அணி செயல்படுவது என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
No comments