உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் பிறந்த அட்டவணை இன பெண்களையும் பெற்றோர்களாக கருதி உரிய சான்றிதழ் வழங்க வேண்டுமென அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அட்டவணை இனத்தை சேர்ந்த மக்களுக்கு உரிய சான்றிதழ் வழங்காமல், புதுச்சேரி அரசு அட்டவணை இன மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அட்டவணை இனத்தவருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கும் போது புதுச்சேரியில் பிறந்த பெண்களையும் பெற்றோர்களாக கருதி அவர்களின் பிள்ளைகளுக்கு 1964-ன் படி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்கின்ற வழிகாட்டுதல் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை புறக்கணித்து உதவி மாவட்ட ஆட்சியர் (வடக்கு) தனக்கு கீழ் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு குறிப்பாணை வழங்கியிருப்பது தவறான ஒன்றாகும்.
எனவே ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசானது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அட்டவணை இனத்து மக்களை கருத்தில் கொண்டு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் பிறந்த பெண்களையும், பெற்றோர்களாக கருத்தில் கொண்டு உரிய சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
No comments