புதுச்சேரியில் இணையவழியில் பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
புதுச்சேரி சைபர் க்ரைம் போலிசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்,
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் இணையதளம் வழியாக தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வாங்குவதற்கு ஆா்வம் செலுத்துகின்றனா். இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக, போலியான பெயா்களில் பட்டாசு விற்பனை நிறுவனங்கள் மற்றும் இணையதள முகவரிகளை தொடங்கி மக்களிடம் பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை அனுப்பாமல் மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.எனவே, பொதுமக்கள் இணையதளம் மூலம் பட்டாசுகள் வாங்க முன்பதிவு செய்து ஏமார வேண்டாம்.
கடந்த ஆண்டு இணையத்தில் பட்டாசு வாங்க முன்பதிவு செய்து 78-க்கும் மேற்பட்டோா் ஏமாந்துள்ளனா். தற்போது, புதுச்சேரியில் கடந்த 4 நாள்களில் 2 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.45 ஆயிரத்தை இழந்துள்ளனா். எனவே, பொதுமக்கள் இணையத்தில் பட்டாசு முன்பதிவு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments