புதுச்சேரியில் அதிகாலை பெய்த மழை காரணமாக தற்காலிக பேருந்து நிலையம் சேரும் சகதியுமாக உள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், மறைமலையடிகள் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து செல்லும் வழித்தடத்தில் சாலை வசதி இல்லாததால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாற வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த சிறு மழைக்கே ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியது. அப்போது பேருந்துகள் சென்று வந்ததால், பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
அடுத்த 3 தினங்களில் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால்,போர்க்கால அடிப்படையில் பேருந்து செல்லும் வழித்தடங்களில் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
No comments