தீபாவளி பண்டிகை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட நாராயணன்பிள்ளை தெருவில் இயங்கி வரும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை கடையினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்து,முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தபோது.
மயிலாடுதுறை மாவட்டத்தை செயல் எல்லையாக கொண்டு மயிலாடுதுறை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயல்பட்டு வருகிறது. இப்பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன.மேலும் இப்பண்டகசாலை 361 அங்காடிகளுக்கு முதன்மை சங்கமாக இருந்து பொதுவிநியோகத் திட்ட பொருள்களை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக பொதுமக்கள் குறைந்த விலையில்,தரமான பட்டாசுகளை வாங்கி பயனடையும் வகையில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை தலைமையகம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் தென்னமரச்சாலை, கூறைநாடு, காவேரிநகர், குத்தாலம், செம்பனார்கோயில் மற்றும் சீர்காழி என மொத்தம் 7 இடங்களில் பட்டாசு விற்பனை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மொத்தம் 7 கடைகளிலும் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான தீபாவளி பட்டாசு விற்பனையாகி உள்ளது. இவ்வாண்டும் தீபாவளி பட்டாசு விற்பனை சிறப்பாக நடைபெற வேண்டும்.பொதுமக்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ்,மயிலாடுதுறை வருவாய் கோட்டச்சியர் விஸ்ணுபிரியா,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments