காரைக்காலில் பாரதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் மாவட்டத் துணை ஆட்சியர் ஜான்சன் கைது.
இதனை அடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இடைத்தரகர் சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதன் தொடர்ச்சியாக காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜே.சி.பி.ஆனந்த் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தேடப்படும் நபராக கருதப்படும் ஜேசிபி ஆனந்த் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயார் செய்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நில அளவையாளர் ரேணுகா தேவியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதனை அடுத்து ரேணுகா தேவியிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் நேற்று மதியம் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை அவரது அலுவலகத்திலேயே வைத்து தனிப்படை போலீசார் அவரை விசாரணை செய்வதாக கூறி அழைத்து சென்று, காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ரகசிய அறையில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் தலைமையிலான ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் துணை ஆட்சியர் ஜான்சனின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் சைபர் கிரைம் பிரிவில் சமர்ப்பித்து ஆய்வு செய்து வந்தனர். ஜான்சன் துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்போடு சார்பு நீதிபதியாகவும் இருந்ததால் அவரை விசாரணை செய்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி இருந்தது இதனால் அவரை சார்பு நீதிபதி பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்று பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் புகார்தாரான துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் விசாரணையில் முக்கிய குற்றவாளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மேலும் முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments