சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட ஆணைக்காரன்சத்திரம், கூத்தியம்பேட்டை, திருமயிலாடி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் 2030- ஆண்டிற்குள் குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் கான்கிரீட்-வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 3600 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 5 வட்டாரங்களில் உட்பட்ட கிராமங்களில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட்-வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் 360 சதுர அடி பரப்பளவில் அரசின் ஒப்புதலுடன் கூடிய 4 வகையான வடிவமைப்பில் ஏதாவது ஒரு வடிவத்தில் பயனாளிகள் விருப்பத்திற்கேற்ப வீடு கட்டிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது.
இதனையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட ஆணைக்காரன்சத்திரம், திருமயிலாடி ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் உரிய தவணைத்தொகை வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளதா எனவும், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட், மணல் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும் கேட்டறிந்தார்கள். மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் வீடுகளின் கட்டுமான பணிகளை தொடர்புடைய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, கூத்தியம்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 இலட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் கொப்பியம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும், பழையபாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சிகுளம் வெட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்கள்.
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) ரமேஷ் பாபு , வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தனர்.
No comments