Breaking News

இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் உண்டியல்களை திருடிய கடலூர் கும்பல் கைது..

 


புதுச்சேரி மற்றும் கடலூரில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் உண்டியல்களை திருடிய கடலூர் கும்பலை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 14 பைக்குகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒன்றரை பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி கோரிமேடு எல்லை பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் புதுவையை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் இருசக்கர வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்,விசாரணையில் அவர்கள் கடலூர் புதுநகரை சேர்ந்த விஜய், ஹரி என்பதும், இவர்கள் கடலூர், புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அவர்கள் திருடிய இருசக்கர வாகனங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டில் இவர்களுடன் மேலும் 4 பேர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடலூர் திருவந்திபுரம் சென்று, இவர்களது கூட்டாளியான விக்னேஷ், ஜெகன் ஆகியோரையும் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். மேலும், அவர்கள் மறைத்து வைத்திருந்த 14 இருசக்கர வாகனங்கள், ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் 9 கிலோ வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


No comments

Copying is disabled on this page!