குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது என்பது வதந்தி: பொதுமக்களுக்கு சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது, தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பதில்.
குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவது என்பது வதந்தி, தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது என மாநகரட்சி மாதாந்திர கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டானுக்கு எனது சார்பிலும், மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்காக உழைத்த ஆணையர் மற்றும் அலுவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஹேப்பி ஸ்ட்ரீட் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அதிமுக கொறடா மந்திரமூர்த்தி, தாமிரபரணி ஆற்றுநீரில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நீதிமன்றமும் அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுத்து வழங்கப்படும் குடிநீர் சுத்தமாகவும், பாதுகாப்பானதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஏழைகளுக்கு பெரிதும் உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்களை மூடப்போவதாக தகவல் வருகிறது. எனவே அம்மா உணவகங்களை தொடர்ந்து செயல்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக வல்லநாடு பகுதியில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, அது முறையாக சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீராக மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் அம்மா உணவகங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.
தொடர்ந்து, கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் முறையாக வருவதில்லை என்றும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இன்னும் சாலை அமைக்கப்படாத பகுதிகளில் சாலை அமைத்துத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்து பேசுகையில், எனது தலைமையிலான இந்த மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்பதற்கு முன்பு இருந்ததைவிட, தற்போது சிறப்பான முறையில் அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக சாலை வசதி, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் போன்ற பணிகள் பெரும்பாலான பகுதிகளில் முடிவடைந்துள்ளது.
இன்னும் சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநகர் முழுவதும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரை பசுமையாக்கும் நோக்கில் ஏற்கனவே பல ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சாலையோரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments