Breaking News

பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சருடன் கொண்டு சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகை..

 


புதுச்சேரியில் மாமூல் கேட்டு வியாபாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நிலையில், சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சருடன் கொண்டு சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் நேற்று இரவு இந்திரா காந்தி சிலை அருகே பெட்டி கடை நடத்தி வரும் சந்திரன் என்பவரை மாமூல் கேட்டு ரவுடிகள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சரியான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த சுயேட்சை எம்எல்ஏ நேரு, நூற்றுக்கும் மேற்பட்ட பொது நல அமைப்பினருடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க எந்த அதிகாரிகளும் வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்,வியாபாரியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, வெளியே அழைத்து வந்தனர். சாலையில் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு, சட்டப்பேரவையை கடந்து, கவர்னர் மாளிகை முன்பு ஸ்ட்ரெச்சரை நிறுத்தி தரையில் அமர்ந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ-வும் அங்கு வந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குநர் மருத்துவர் செவ்வேளிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சந்திரனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகே பதட்டமான சூழல் நிலவியது.

No comments

Copying is disabled on this page!