Breaking News

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்ட குழு அலுவலகம் திறப்பு. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு:- எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பேசினார்:-

 


மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகம் கோ. பாரதி மோகன் நினைவகம் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மயிலாடுதுறைக்கு வருகை தந்த அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்திற்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து செந்தொண்டர்கள் பேரணியில் நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றினார். சிறப்பு அழைப்பாளர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய கட்டிடம் திறந்து வைத்ததற்கான கல்வெட்டை மத்திய குழு உறுப்பினர் சண்முகம் திறந்து வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே சாமுவேல்ராஜ், நாகை மாலி மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கச்சேரி சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரகாஷ்காரத் பங்கேற்று பேசியபோது..

மூன்றாவது முறையாக பாஜக பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைத்தாலும் பாஜக கொள்கை இந்துத்துவா, மற்றும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி பலமான கூட்டணியாக உருவாகியிருக்கிறது. மோடி அரசு கொண்டுவரக்கூடிய சீரழிவு கொள்கைகளை பலமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை அமல்படுத்த பல்வேறு மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் என்று இருக்கக் கூடிய இந்தியாவின் பன்முகத் தன்மையை நிராகரித்து, இந்து ராஷ்டிரம் அமைக்க முற்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய செயலாக இருக்கும். இந்துத்துவா கோட்பாட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் நோக்கத்தோடு இதனை அறிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது என்பது அந்தந்த மாநில அரசுகளுக்குட்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்களர் பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப்பட்ட நிலையில், அதனை மத்திய அளவில் தயாரிக்கும் முடிவை முன் வைத்துள்ளனர். மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் இது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஆர்எஸ்எஸ், பாஜகவால் முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. அம்பானி, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கை உருவாக்கப்படுகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்துக்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே ரூ.86 ஆயிரம் கோடி தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்பின்மை இதனால் மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் வெளியுறக் கொள்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளனர். பாரம்பரியமாக உலகமயமாக்கல், ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருந்தோம். மோடி அரசு கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர். ஐ.நா சபையில் இஸ்ரேலை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது வெட்கப்படத்தக்கது. அமெரிக்கா எடுக்கும் முடிவையொட்டியே இந்தியாவும் முடிவெடுக்கும் நிலை உள்ளது.

 பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இடது சாரி சக்திகளை பலமான அமைப்பாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாஜக அரசின் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டி போராட வேண்டியுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கைகள் குறித்து பரிசீலிக்க உள்ளோம். இடது சாரி சக்திகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை தொடர்பான கொள்கைகளை முன் வைக்க உள்ளோம் என்று பேசினார்.

No comments

Copying is disabled on this page!