அவல்பூந்துறை பைரவர் கோவிலில் நடைபெற்ற அஷ்டமி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அபிஷேகம் செய்தனர்.
பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலபிஷேகம் நடைபெற்றன. பக்தர்கள் கருவறைக்குள் சென்று பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதேபோல் கோயிலில் முகப்பில் உள்ள 39 அடி உயர காலபைரவர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக கோயிலின் முன்பு உள்ள பைரவர் சிலைக்கு பக்தர்கள் தேங்காயில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த அஷ்டமி பூஜையில் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
No comments