Breaking News

தூத்துக்குடி சிவன்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வடம் பிடித்து துவக்கிவைத்தார்.


தூத்துக்குடியில் புகழ்பெற்ற சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகரிரில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (27ம் தேதி) காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பிரமாண்ட தேரில் எழுந்தருளினார். இதில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் வடம் பிடித்து தேரினை இழுத்து தொடங்கி வைத்தனர். 

தொடர்ந்து பக்தர்கள் விண்ணதிரும் கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்சிகளுடன் கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பாகம்பிரியாள் அறக்கட்டளை சார்பில் சிவன் கோவில் அருகில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, மந்திரமூர்த்தி, ஜெயபால், பாலசங்கர், முருகேஸ்வரி, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகரன், முன்னாள் வட்ட செயலாளர் கீதா மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையில் மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் 10ஆம் நாளான திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு பூம்பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெறும். 11ம் நாளான செவ்வாய்க்கிழமை (29ம் தேதி) திருக்கல்யான நடைபெறும். 

No comments

Copying is disabled on this page!