கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து சாதனை.. கின்னசில் இடம் பெற தமிழக அரசுக்கு கோரிக்கை
கால்கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து 4 டன் மகசூல் எடுத்து சாதனைபடைக்கும் விவசாயி..! |
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பெருமாள்(68) இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் ஏதாவது சாதனை புரிய வேண்டுமென்ற நோக்கில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு கால் கிலோ நெல் விதையை விட்டு அதில் இருந்து நாற்றுக்களை வளர்த்து ஒரு ஏக்கருக்கு நடவு செய்து 4 டன் நெல் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து விவசாயி ஆலங்குடி பெருமாள் கூறுகையில்..
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களில் இருந்து விதையை தரமானதாக தேர்வு செய்து பாதுகாப்பாக மண்குதிர், பத்தாயம், வைக்கோல்பிரி போன்றவற்றில் பதப்படுத்தி விதைநெல்லை பாதுகாப்பாக வைத்து சாகுபடி தருணத்தில் விதைவிட்டு நடவு பணிகள் செய்வது வழக்கம். தற்போது உள்ள அவசர உலகத்தில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் எந்த ஒரு விதை நெல்லையும் விதையை எடுத்துவைத்து பாதுகாக்காமல் அதிகவிலை கொடுத்து கடைகளில் வாங்கி விதைப்பு செய்யும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்கும் முயற்சியில் கடந்த 2003ம் ஆண்டு முதல் இறங்கினேன். ஒரு கிலோ விதையில் ஒற்றை நாற்று முறையில் ஒரு ஏக்கர் நடவு செய்யலாம் என்று நான் கூறியபோது எந்தஒரு விவசாயியும் நம்பவில்லை. அதன்பிறகு அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு நேரடியாக கடிதம் எழுதினேன். அதன்பிறகு வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் என்னை தேடிவந்தனர். அதன்பிறகு சாகுபடி செய்யும் வழிமுறைகள், விதைவிட்டு நடவு செய்து, அறுவடை செய்யும் வரையில் தினமும் கண்காணித்து கால் கிலோ நெல் விதையை கொண்டு ஒரு ஏக்கர், நடவு செய்து 4 டன் மகசூல் எடுத்து 2011ம் ஆண்டு சாதனை படைத்ததை உறுதி செய்தனர். நம்மாழ்வார் உள்ளிட்ட பலர் விருது கொடுத்து பாராட்டினர். எனது சாகுபடி முறையை நம்மாழ்வார் அய்யா பல ஊர்களுக்கு செல்லும்போது விவசாயிகளிடம் எடுத்துக்கூறி ஊக்குவித்தார். தற்போது குறுவை சாகுபடிக்கு கால் கிலோ நெல் விதைகொண்டு ஒரு ஏக்கருக்கு நாற்று தயார் செய்து நடவு செய்துள்ளேன். சம்பா, தாளடிக்கு அரை கிலோ நெல் விதைவிட்டு ஒரு ஏக்கர் நடவு செய்து வருகிறோன். ஒரு ஏக்கருக்கு கால் கிலோ விதை தேர்வு செய்தும் நல்ல முளைப்புதிறன் கொண்ட விதையை தேர்வு செய்ய வேண்டும். உப்புகரைசலை எடுத்து அதில் நெல்லை போட்டால் பதர் நெல், கருக்காய் போன்றவை மிதந்து தரமான நெல் அடியில் தங்கும். அதனை எடுத்து கால்கிலோவிற்கு எடைபோட்டு முளைக்கட்டி மூன்றாம் கொம்பு முளைப்பின் போது 3 சென்ட் நிலத்தில் முறையான இடைவெளி விட்டு விதைப்பு செய்தால் ஒரு ஏக்கர் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுக்கள் நிச்சயம் கிடைக்கும். சம்பா பருவத்திற்கு வெள்ளைபொன்னி, கிச்சலிசம்பா, துயமல்லி போன்ற நெல் ரகங்களை தற்போது விதைவிட்டுள்ளேன். நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை இந்த வழிமுறையில் சாகுபடி செய்துள்ளேன். ஜீரகசம்பா நெல்லில் அதிக அளவில் களப்பு இருந்ததால் நெல்ஜெயராமன் களப்பு இல்லாத விதை தேர்வு செய்துகொடுக்க கூறினார். அதன்படி ஒருகதிரில் இருந்து நெல் விதை எடுத்து அதில் இருந்து களப்பு இல்லாமல் விதைகளை உற்பத்தி செய்து கொடுத்தேன். பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, ஜுரகசம்பா போன்ற பல பாரம்பரிய நெல் ரகங்களில் இருந்த களப்புகளை அகற்றி களப்பில்லாத தரமான உரிய பாரம்பரிய நெல் விதைகளை டன் கணக்கில் உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் பாரம்பரிய விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வழிமுறைகளை ஒவ்வொரு விவசாயியும் பின்பற்றினால் அதிக பணம் கொடுத்து விதை நெல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது வயலில் விளைவிக்கக்கூடிய நெல்லில் இருந்து தரமான நெல்லை விதைக்காக தேர்வு செய்து எடுத்துவைத்து கொண்டால் பல ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு மிச்சப்படும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 20 கிலோ விதைவிட்டு நடவு செய்பவர்கள் கூட இந்த முறையை பின்பற்றினால் விதை நெல்லுக்கான செலவு குறைவதோடு ஒற்றை நாற்று நடவு முறையை முறையாக கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம். விவசாயத்தை ஊக்குவிக்க இந்த முறையை வேளாண்மைத்துறை மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் கற்றுகொடுக்க வேண்டும். இதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்து உதவ வேண்டும் என்றார்.
No comments