அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா..
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணையின் பெயரில் அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழா புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் சீரும் சிரப்புமாக நடைபெற்றது. உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, புரட்சி தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளரின் ஆணையின்படி ஏழை எளிய மக்களுக்கு இலவச புடவைகள், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாநில கழக செயலாளர் பேசியதாவது:
இந்தியாவில் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் எந்த நோக்கத்திற்காக கட்சி துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை கடைசிவரை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டு தமிழகத்தின் முதலமைச்சராக கொண்டுவரப்பட்ட மறைந்த கருணாநிதி அவர்களின் எதேச்சேகார, சர்வாதிகார அடக்குமுறையை கண்டித்து நம்முடைய புரட்சி தலைவர் 52 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். அவரது எண்ணப்படி இன்றுவரை ஏழை எளிய மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துணை நிற்கும் ஒரே இயக்கமாக அதிமுக உள்ளது.
மறைந்த மாபெரும் தலைவர்களான புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு இந்த இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் அழிக்க நினைத்தவர்களும், கழகத்தை முடக்கம் செய்யதவர்கள் இன்றைக்கு அரசியலில் காணாமல் போய் உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகின்ற விதத்தில் செயல்பட்ட கழக துரோகிகளின் அத்தனை செயல்களையும் தனது மதிநுட்பத்தால் முறியடித்து கழகத்தை கண் இமைபோல் கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் கட்டி காத்து வருகிறார்.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சியில் அமைந்த விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றுவரை தனது சாதுர்யமான பொய்களால் மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறார். தற்போது பெய்து வரும் பெருமழையின் போது பாதிக்கப்படும் மக்கள் ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என மனமுடைந்து பேசுகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் திமுக தமிழகத்தை பற்றியோ, தமிழக மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மதுபான கொள்கையில் தடுமாற்றம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் உற்பத்தி கேந்திரமாக தமிழ்நாடு மாற்றம். தொடர் கொலை கொள்ளைகளால் மக்கள் பயம் கலந்த பீதியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிதண்ணீர் வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் பல்வேறு வரிகளை போட்டுள்ளனர். தமிழக மக்கள் நலனைவிட தனது குடும்ப நலனே பெரிதென தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது.
அதிமுக 52 ஆண்டுகள் புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்ட கொள்கை கோட்பாடுகளில் சிறிதும் தவறு இழைக்காமல் செயல்பட்டு இருக்கிறது. மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் இவர்கள் சீரிய தலைமையில் அதிமுக மீண்டும் பொலிவு பெற்று திகழ்கிறது. மறைந்த மாபெரும் தலைவர்களான புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை பின்பற்றி கழகத்தை எஃகு கோட்டை போன்று கட்டுகோப்புடன் கழகத்தை வழி நடத்துகிறார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதே நம் கொள்கைக்கு சிறிதும் ஒத்துவராத பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என ஆன்மைத்தனமாக அறிவித்துள்ளார். தூங்கி எழுந்தவுடன் ஒவ்வொரு நாளும் மத்திய பாஜக அரசையும், நாட்டு பிரதமரையும் மலிவு விளம்பரத்திற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் விமர்சனம் செய்கிறார். ஆனால் மறுபுறம் டெல்லி வரை சென்று பிரதமருக்கு காவடி தூக்குவதும், தமிழக ஆளுநருடன் டீ பார்ட்டி என்ற பெயரில் வெண்சாமரம் வீசுவதுமாக உள்ளார்.
எடப்பாடியார் பொருத்தமட்டில் இரட்டை நாடகம் நடத்த தெரியாது. கலைத்துறையில் சிறந்த நடிகர்களாக வலம் வந்த மாண்புமிகு புரட்சித்தலைவரும், மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களும் அரசியல் அரங்கில் உள்ளொன்று வைத்து வெளியொன்று நடந்தவர்கள் இல்லை.
அதிமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை இழந்திருக்கலாம். ஆனால் தமிழக மக்களுடைய மனதில் மன்னாதி மன்னனாக இன்றைக்கு எடப்பாடியார் தான் திகழ்கிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக துணை நிற்கும் ஒரே தலைவர் நம்முடைய எடப்பாடியார் ஆவார். புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது இல்லாமல் இருக்கலாம். புதுச்சேரியை ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளையும், ஊழல் முறைகேடுகளையும் தட்டிகேட்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். எதிர்வரும் 2026-ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக முதலமைச்சராக மீண்டும் எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார். நாமும் புதுச்சேரி மாநிலத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் புரட்சி தலைவி அம்மா ஆட்சியை நம்மால் கொண்டுவர முடியும். இந்த 52-வது ஆண்டுவிழா நோக்கமே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை நமக்கான வெற்றி தேர்தலாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments