Breaking News

மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு. பயணிகள் அவதி.


சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த மார்க்கத்தில் பயணிக்கின்றன. இந்நிலையில் மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

சென்னை நோக்கி செல்லக்கூடிய தாதாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில் என மூன்று ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அணிவகுத்து நின்றன. பொன்னேரி கவரைப்பேட்டை கும்மிடிப்பூண்டி என சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இரு வழி தடங்கள் மட்டுமே இருப்பதால் மாற்றுப் பாதையில் ரயில்களை இயக்க முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் விரைந்து கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கத்தை முழுமையாக நான்கு வழி பாதையாக மாற்றிட வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

No comments

Copying is disabled on this page!