தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 4 கோடியே 57 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தசரா திருவிழாவிற்கு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து கிராமம் கிராமமாக சென்று காணிக்கை பிரித்து கடைசி நாளில் முத்தாரம்மன் கோவிலில் செலுத்துவார்கள். இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12ஆம் தேதி நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்து வந்தது. இதில் 18 நிரந்தர உண்டியல்களும், தசரா திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்களும் எண்ணும் பணி நடந்து வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் மூலம் 91 லட்சத்து 95 ஆயிரத்து 65 ரூபாய் ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் 30 கிராம் 400 மில்லி தங்க பொருட்களும், 820 கிராம் 300 மில்லி வெள்ளி பொருட்களும் வருவாயாக கிடைத்துள்ளது. அதே போல் தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்கள் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 27 ஆயிரத்து 965 ரூபாயும், 84 கிராம் 900 மில்லி தங்க பொருட்களும், 1869 கிராம் 600 மில்லி வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளது.
மொத்தமாக தசரா திருவிழாவின் போது உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 115 கிராம் 300 மில்லி தங்க பொருட்களும், 2689 கிராம் 900 மில்லி வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் 4 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 516 ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments