Breaking News

கடல் கடந்து சுவைக்கப்படும் மொரு மொரு பொறையார் இஞ்சி பக்கோடா.100 ஆண்டுகளாய் பாரம்பரியம் மாறாமல் செய்யப்படும் இஞ்சி பக்கோடா தீபாவளிக்கு தயார்.

 


நாள்தோறும் சந்தையில் புதிது புதிதாக தின்பண்டங்கள் விற்பனைக்கு வந்தாலும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் இஞ்சி பக்கோடாவுக்கு இன்றும் பெருமை கூடிக் கொண்டேதான் இருக்கிறது. மருத்துவக் குணம் மிகுந்த மூலப் பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் செய்வதால், உடல் நலத்திற்கு மிக ஏற்றதாக இந்த இஞ்சி பக்கோடா இருக்கிறது. பொறையார் பகுதி விழாக்களிலும் பண்டிகைகளிலும் விருந்து உபசரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது இஞ்சி பக்கோடா. நூறு ஆண்டுக்கும் மேலாக மக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் இஞ்சி பக்கோடாவை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இஞ்சி, பூண்டு, சோம்பு, கிராம்பு, பட்டை,லவங்கம் ஆகிய மருத்துவக் குணமிக்க பொருட்களை பாரம்பரியம் மாறாமல் உரலில் இடித்து பின் கடலை மாவு, அரிசி மாவு, வருத்து இடித்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களோடு பக்குவமாக பிசைந்து சுத்தமான சமையல் எண்ணெய்யில் கைகளாலேயே பிழிந்து, பொரித்து எடுக்கப்படுகிறது. பொரித்த பக்கோடாவை மறுமுறையும் பொரித்தால் தான் முழுமையாக மொரு மொரு பக்கோடா கிடைக்கிறது.இவ்வாறு செய்வதன் மூலம் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் சுவை தனித்தனியே உணர முடிகிறது.



காரம் எண்ணெய்யில் இறங்கிவிடுவதால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது கிடையாது. கை பக்குவமாக எந்தவித கலப்படமுமின்றி மருத்துவக்குணங்கள் நிறைந்தபொருட்களைக் கொண்டு தயாரிப்பதாலும், சுவையானதாக இருப்பதாலும் முன்கூட்டியே ஆர்டர்கள் செய்து வாங்கிச்செல்கின்றனர். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவர்ந்த பொறையார் இஞ்சி பக்கோடா குவைத்,மஸ்கட்.சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா என 35 நாடுகளுக்கும் மேல் விற்கப்படுவதாக இஞ்சி பக்கோடா தயாரிப்பு தொழிலில் ஈடுப்டுள்ள பொறையார் கடை உரிமையாளர் கூறுகிறார். தற்போது இஞ்சி பக்கோடாவை முகமதுஅலி ஜின்னா, அசன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த இஞ்சி பக்கோடா செய்வதற்கு 3 முதல் 5 மணி நேரமாகிறது. இருந்த போதிலும் லாபத்தை கருதாமல் குறைந்த அளவே தயாரிக்கப்படும் இந்த அலாதியான சுவை மிக்க இஞ்சி பக்கோடா சற்று நேரங்களிளேயே விற்று தீர்ந்து விடுகிறது.


இஞ்சி பக்கோடா தயாரிப்பு குறித்து முகமது அலி ஜின்னா கூறுகையில் எங்களது குடும்பத்தினர் இரண்டு தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். நாள்தோறும் வெளிநாடுகளுக்கு செல்லும் 5 க்கும் மேற்பட்ட நபர்களிடமாவது பொறையார் இஞ்சி பக்கோடா நிச்சயமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கிலோ ரூ 200 விற்ற பக்கோடா தற்பொழுது பல்வேறு விலையேற்றம் காரணமாக ரூபாய் 300 க்கு விற்கப்படுகிறது. பக்கோடா தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்தாலும் லாப நோக்கமின்றி 100 ஆண்டுகள் பாரம்பரியத்தை காப்பாற்றவும் தொடர்ந்து இஞ்சி பக்கோடா தயாரித்து வருகிறோம் என கூறுகின்றனர்.

No comments

Copying is disabled on this page!