தூத்துக்குடி- சென்னை இடையே பகல் ரயில் இயக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். செயலர் பிரமநாயகம் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். பொருளாளர் லட்சுமணன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும், தூத்துக்குடி- பாலக்காடு இடையிலான பாலருவி விரைவு ரயிலில் ஒரு 3 அடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், ஒரு 2 அடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் கூடுதலாக இணைக்க வேண்டும், தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர நேரடி ரயில் இயக்க வேண்டும், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மைசூர் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், ஓகா விரைவு ரயில்கள் அனைத்தும் நின்று செல்லவும், தூத்துக்குடி-திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்கவும், திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரை ரயில்கள் செல்லும் நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்காக அதிகாலையில் தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம்- திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி புதிய, பழைய பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், துணைத் தலைவர் மோகன், துணைச் செயலாளர் அந்தோணி முத்துராஜா, நிர்வாகச் செயலாளர் ஆனந்தன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பபியான், சிவஞானம், பாலமுருகன், ஜோபாய் பச்சேக், முருகன், பூலோக பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments