ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாக புதிய வழித்தடம்; போக்குவரத்து துறை அமைச்சரிடம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை!
தொகுதி மக்களின் நலனுக்காக ஒட்டப்பிடாரம், புதியம்புதூர், குறுக்குச்சாலையை உள்ளடக்கி புதிய வழித்தடம் உருவாக்கித்தரக் கோரி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்துள்ள மனுவில்,
ஒட்டப்பிடாரம் நகரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு கருவூலம், வேளாண்மைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகங்கள், சுகாதாரத்துறை அலுவலகங்கள் உள்ளிட் பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. அதேபோல், புதியம்புத்தூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் பல்வேறு தொழில்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களும் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியூர்களில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், அரசு ஊழியர்கள், ஜவுளி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மேற்கல்வி, பணிகள் நிமித்தமாக செல்வதற்கு நேரடியாக பேருந்து வசதிகள் இல்லை. இதனால் தூத்துக்குடி சென்று அங்கிருந்து அரசு விரைவு பேருந்துகள் மூலமாக சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இயக்கப்படுகின்ற அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சில குறிப்பிட்ட அரசு பேருந்துகளை புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை வழியாக இயக்கினால் மாணவர்களும், அரசு ஊழியர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் பயன்பெறுவார்கள். இதனால் கால விரையமும், அலைச்சலும், தேவையற்ற போக்குவரத்து செலவும் தவிர்க்கப்படும். ஆகவே, அரசு விரைவு போக்குவரத்து கழகம் புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குறுக்குசாலையை உள்ளடக்கிய புதியர் வழித்தடத்தை ம் உருவாக்கி தந்து உதவிட வேண்டும் என எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments