ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேட்டரி இருசக்கர வாகனங்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக புதுச்சேரி நகரப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சுமார் 4000-க்கும் மேற்பட்ட பதிவு எண்கள் இல்லாத, பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் கூடும் பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், ரயில் நிலையம், சுற்றுலாத் தலங்கள் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு ஆன்லைன் புக்கிங் மூலமாக முன் பதிவு செய்து வாடகைக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வரும் ஆட்டோ தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சி என்பது அவசியமான ஒன்றாக இருந்தாலும், சுற்றுலாவை நம்பி கடந்த பல ஆண்டுகாலமாக தொழிலில் இருக்கும் ஆட்டோ தொழிலாளர்களை முழுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும் இந்த பேட்டரி இருசக்கர வாகனத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.எனவே, முதல்வர் இந்த பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களால் பாதிக்கப்படும் ஆட்டோ தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments