புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐந்தாம் நாளான நேற்று இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது. காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை வழியாக, கடற்கரைக்கு மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
கடற்கரை சாலையில் உள்ள பழைய நீதிமன்றம் அருகே ராட்சத கிரேன் மூலம், பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. சுமார் 70-க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கடற்கரை சாலையில் நடைபெற்ற விஜர்சனம் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம், பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி, உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments