நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பனை விதை நடும் விழா.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்த ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக தட்டாங்குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாய்க்கால் பகுதியில் பனை விதை நடும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தட்டாங்குட்டை பஞ்சாயத்து தலைவர் புஷ்பா செல்லமுத்து, தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி சுகன்யா மற்றும் சமூக ஆர்வலர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலர் லீலா குமார், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் திரு. ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கிரிஜா ஆகியோர் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை, தட்டாங்குட்டை பஞ்சாயத்து, ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுற்றுசுழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பனை விதை விதைத்தபின் அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டு உதவி என்ற மொபைல் ஆப் மூலமாக அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து கொண்டனர். இதன் மூலம் அவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பாராட்டு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தளிர்விடும் பாரதத்தின் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
No comments