உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணி நடத்திய பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்த வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி!.
இதுகுறித்து திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை மீறி செயல்படுவதும், தனியாருக்கு சாதகமாக இப்பொழுதே மின்கட்டணத்தை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்வதையும் கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற கோரியும் இன்று இந்தியா கூட்டணி சார்பில் விடப்பட்ட அழைப்பை ஏற்று இந்த முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடையும் விதத்தில் ஆதரவளித்த வணிக நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்கத்தினர், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தக் கொள்கிறேன்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி ஒன்று ஆளும் கட்சியை முந்திக்கொண்டு இது ஏதோ மக்களுக்கு தொந்தரவு செய்யும் போராட்டம் என்றும் ஆகவே இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களை முன் கூட்டியே கைது செய்ய வேண்டும் என்றும் தங்களது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர். தனி மனிதனை முன்னிலைப்படுத்தி மக்களை கொடுமைக்குள்ளாக்கும் போராட்டத்தை இந்தியா கூட்டணி முன்னெடுக்கவில்லை. மாறாக மின் கட்டண உயர்வு என்பது புதுச்சேரியில் வாழ்கின்ற 14 லட்சம் தனி மனிதரையும் பாதிக்கக் கூடியதாகும். அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்தில் தான் இந்த போராட்டத்திற்கு மிகப் பெரிய ஆதரவு பொதுமக்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. ஆக இது ஒரு மக்கள் போராட்டம்.
அனைத்து மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த போராட்டம் மிகப் பெரிய வெற்றியை தந்திருக்கிறது என்பதை இந்த அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெறும் முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையேல் இந்தியா கூட்டணி தலைவர்களோடு ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகுவோம் என்று இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments