சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் சேராத பதிவு செய்யாத மாணவ, மாணவிகள் மேற்கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, வழிவகை செய்யும் விதமாக நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-22, 2022-23, 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பில் இடை நின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, வழிவகை செய்யும் விதமாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ‘உயர்வுக்குப் படி’ என்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து தொடர்புடைய அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன.
முதல் கட்டமாக கடந்த 10.09.2024 அன்று மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உயர்வுக்குப்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று 13.09.2024 விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் உயர்கல்வி பயில்வதற்காக தடைகளை நீக்கி மாணவ,மாணவிகளின் கல்வி கனவை நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது.
மேலும், 2,வது கட்டமாக 20.09.2024 மற்றும் 24.09.2024 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது, முதல் கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்காக நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை உள்ள பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் கலந்து கொண்டு தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்பு விவரங்கள் மற்றும் தற்போதைய காலியிடங்கள், அதற்கான கட்டண விவரங்கள் குறித்து அரங்கு அமைத்து துண்டு பிரசுரங்கள் வழங்குவதோடு, விருப்பம் உள்ள மாணவ மாணவிகளை கல்லூரியில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, வழிகாட்டுதலும் வழங்க உள்ளனர்.
மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி தங்கி பயில்வதற்கான விடுதி வசதிகள், இட ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், வங்கிகள் வாயிலாக கல்வி கடன் பெறுவதற்கான அணுகுமுறைகள் உட்பட அனைத்து விவரங்களும், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத்திருமான தடுப்பு சார்ந்து விழிப்புணர்வும், குறுகிய கால திறன் பயிற்சிகள் குறித்தும், மாணவ மாணவிகள் மனோதிடத்துடன் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மாணவ மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக சாதிச்சான்று, வருமானச்சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று போன்ற சான்றிதழ்களை இங்கேயே பெறுவதற்கு ஏதுவாக இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டதோடு, விரைவாக சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து மாணவ, மாணவிகளும் ஏதேனும் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, நன்முறையில் படித்து வாழ்வினில் வெற்றி பெற்றிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், முதன்மை கல்வி அலுவலர்ஜெகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துக்கணியன், பரமசிவம், மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments