புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் பந்த் அறிவித்துள்ள இண்டியா கூட்டணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டுமென கோரிக்கை.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர், முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சியினர் நாளை பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் நாளை இண்டியா கூட்டணி கட்சியினர் பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நாளை பந்த் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே இண்டியா கூட்டணியினரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், மலிவு விளம்பரத்திற்காகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பந்த் போராட்டத்தில் ஈடுபட உள்ள இண்டியா கூட்டணியினரை முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் என்றார்.
பள்ளி, கல்லூரிகள் உள்ளதா,பேருந்துகள் இயங்குமா? என அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்காமல் மௌனம் காப்பது பாஜக - திமுகவின் கள்ள கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை மதிக்காமல், ஆட்சியாளர்களின் உத்தரவோடு, இந்தியா கூட்டணியின் பந்த் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை இருப்பது மத்திய அரசை அவமதிப்பதாகும்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெரும் வரை, மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அறவழியில் அதிமுக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.
- இரா.சரவணன், செய்தியாளர் புதுச்சேரி
No comments