பொன்னேரி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தல். மிக்ஜாம் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு முறையாக பயிர் காப்பீடு வழங்கவில்லை என புகார்.
இந்நிலையில் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் பயிர் காப்பீடு பெற்று தர வலியுறுத்தி விவசாயிகள் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆண்டுதோறும் பயிர் காப்பீட்டு தொகை செலுத்தி வரும் நிலையில் மழை, புயல், வெள்ள சேதத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில்லை எனவும், ரேண்டம் முறை என காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினர்.
ஆண்டுதோறும் காப்பீட்டு தொகை செலுத்தி வந்தாலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் குளறுபடி செய்வதாக குற்றம் சாட்டினர். இருசக்கர வாகனங்கள் எப்போது பழுதடைந்தாலும் உடனுக்குடன் காப்பீட்டு தொகை கிடைப்பதாகவும் பயிர்கள் சேதம் அடையும் போது முறையாக காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வேளாண் துறை அதிகாரிகள் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வேளாண் துறை அதிகாரியிடம் முறையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து வேளாண்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தினர்.
புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments