புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீராம்பட்டினம் தேர் திருவிழாவில் கொலை செய்யப்பட்ட நரிக்குறவரின் குடும்பத்தினருக்கு ரூ.4.42 லட்சம் நிதியுதவியை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
புதுச்சேரி அருகே வீராம்பட்டிணம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, திருவிழாவில் சிதம்பரம் கீரப்பாளையம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த வள்ளிமலை என்பவா் பொருள்களை விற்பனை செய்ததாக தெரிகிறது. அப்போது, அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதில், வள்ளிமலை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், புதுவை அரசு ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின்படி, ரூ.4.42 லட்சத்துக்கான காசோலை வள்ளிமலை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ரங்கசாமி காசோலையை வள்ளிமலை மகன் மாவீரனிடம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் சரவணன்குமாா், துறையின் இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments