அரசு சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே தலைஞாயிறு அரசு உதவி பெறும் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் அஜித்பிரபுகுமார் வழிகாட்டுதலின் பேரில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், காளி,வட்டார மருத்துவ அலுவலர் கிளின்டன் ஜூட், ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன் ஆகியோர்கள் முன்னிலையில் முகாம் துவங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் எம் எல் ஏ அவர் கேட்டறிந்தார். இந்த முகாமில் குழந்தை மருத்துவர், பல் மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர் என பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். அதுமட்டுமின்றி தனியாரில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை, இசிஜி, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, எலும்பு முறிவு உட்பட பல்வேறு பரிசோதனைகளை இந்த முகாமில் இலவசமாக பொதுமக்களுக்கு செய்து கொடுத்ததால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இது போன்ற நன்மை தரக்கூடிய திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்று பயன்பெற கூடிய பொது மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன் சிறப்பாக செய்திருந்தார்.
No comments