மின் கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் லட்சக்கணக்கான மக்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என புதுவை அரசுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்திய பாஜக - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மாலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் கண்டன உரையாற்றி, கழகத்தினருக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. என்றார்.
மூன்று ஆண்டுகால பாஜக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்று மாறாக பின்னோக்கி சென்றுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டிலேயே மிக மோசமான முதலமைச்சரை இம் மாநில மக்கள் கொண்டுள்ளது மிகவும் கவலை அடைகிறது என தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இல்லை, மேம்பாலங்கள் இல்லை, புறவழி சாலைகள் இல்லை மற்றும் நீண்ட நாள் திட்டமான சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ரயில் சேவை உட்பட எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாத மாநிலமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவில்லை என்றால் லட்சக்கணக்கான மக்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments